எனது கெரியரில் மிகச்சிறந்த தருணம் இந்தியாவுக்கு எதிரான அந்த வெற்றிதான் - ரசல்
2016-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.;
image courtesy:ICC
ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரசல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரு ஆட்டங்கள் வருகிற 20 மற்றும் 22-ந்தேதிகளில் கிங்ஸ்டனில் நடக்கிறது. இவ்விரு ஆட்டங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவதாக ரசல் அறிவித்துள்ளார்.
ரசல், 2012 மற்றும் 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் அங்கம் வகித்துள்ளார். இன்னும் 7 மாதங்களில் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அவரது ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் தனது கிரிக்கெட் கெரியரில் மிகச்சிறந்த தருணம் குறித்து சமீபத்திய பேட்டியில் ரசல் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நிச்சயமாக எனது சிறந்த தருணம் 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிதான். அந்த அரையிறுதி ஆட்டத்தில் நான் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றேன். இந்தியாவில் நடந்த அந்த போட்டியில் 190+ (192 ரன்கள்) ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் இந்தியாவை மட்டுமே ஆதரித்தது. அது ஏற்கனவே கொஞ்சம் அழுத்தமாக இருந்தது. ஆனால் பிட்ச் நன்றாக இருந்தது. எனவே எங்களது பின்வரிசை பேட்ஸ்மேன்களின் மீது இருந்த நம்பிக்கை, களத்திற்கு சென்று நான் சுதந்திரமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது" என்று கூறினார்.
அவர் கூறுவது போல அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெறும் 20 பந்துகளை எதிர்கொண்ட ரசல் 43 ரன்கள் அடித்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.