இதனாலயே அவர் சேஸ் மாஸ்டர் - விராட் கோலிக்கு சேவாக் புகழாரம்
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார்.;
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குருனால் பாண்ட்யா 73 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குருனால் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க கட்டத்தில் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் விராட் கோலி - குருனால் பாண்ட்யா இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. இதில் விராட் கோலி (47 பந்துகளில் 51 ரன்கள்) நிதானமாக விளையாட குருனால் பாண்ட்யா (47 பந்துகளில் 73 ரன்கள்) அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தனர்.
இந்த போட்டியில் கடினமான பிட்ச்சில் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி கவலைப்படாமல் விளையாடி பெங்களூருவை வெற்றி பெற வைத்த விராட் கோலி தம்மை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளதாக இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் எதிர்பார்ப்பு நிகராக இல்லை. ஆனால் களத்தில் திடமாக நின்று விளையாடிய அவர் தம்முடைய விக்கெட் இழந்தால் புதிய பேட்ஸ்மேன்கள் வந்து சேசிங் செய்ய முடியாது என்பதை உணர்ந்து விளையாடினார். அந்த வகையில் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இல்லாவிட்டாலும் அவர் கடைசி வரை நின்று விளையாடினார்.
அவர் போட்டியை பினிஷிங் செய்யாவிட்டாலும் ஆர்சிபி வெற்றி பெற்றது. எனவே தோல்வியை சந்திக்காத வரை ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையில்லை. ஒருவேளை பெங்களூரு தோல்வியை சந்தித்திருந்தால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாம் விவாதம் செய்திருப்போம். குருனால் பாண்ட்யாவுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது. அதில் சுதந்திரமாக ரன்கள் அடித்த விராட் கோலி எதிர்புறம் பாண்ட்யாவும் நன்றாக விளையாட உதவி செய்தார்.
விராட் கோலி தம்முடைய விக்கெட்டை விடக்கூடாது என்று தெரிந்து விளையாடினார். கடைசி வரை விளையாடினால் ரன்கள் தாமாக வரும் என்பது அவருக்கு தெரியும். டெல்லி கடைசி 5 ஓவரில் 50 - 60 ரன்கள் அடித்தது என்பது அவருக்குத் தெரியும். எனவே கடைசி வரை நின்றால் வெல்ல முடியும் என்று நினைத்து விளையாடிய விராட் கோலி இந்த காரணத்தாலேயே சேஸ் மாஸ்டர் என்று அறியப்படுகிறார்" என கூறினார்.