இறுதி கட்ட பேட்டிங்கில் அசத்திய டிரெண்ட் போல்ட்.. எம்.ஐ. அணி தகுதி சுற்று 2-க்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.;

Update:2025-07-10 18:21 IST

image courtesy:twitter/@MINYCricket

டல்லாஸ்,

அமெரிக்காவில் நடைபெற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், எம்.ஐ.நியூயார்க் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. சியாட்டில் ஆர்காஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இதில் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருந்தன. இந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த வாஷிங்டன் பிரீடம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது இடம் பிடித்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தகுதி சுற்று 2 ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் இன்று (இந்திய நேரப்படி) நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடங்களைப் பிடித்த சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ஸ் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற எம்ஐ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி எம்.ஐ. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சேவியர் பார்ட்லெட் 44 ரன்கள் அடித்தார். நியூயார்க் தரப்பில் ரஷில் உகர்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மோனங் படேல் - டி காக் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் தலா 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க எம்.ஐ. நியூயார்க் தோல்வியை நோக்கி சென்றது.

இருப்பினும் இறுதி கட்டத்தில் பேட்டிங்கில் அசத்திய டிரென்ட் போல்ட் (22 ரன்கள்) எம்.ஐ. அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். முடிவில் 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த எம்.ஐ.நியூயார்க் அணி 132 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ.நியூயார்க் தகுதி சுற்று 2 ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 2 ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்