உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மரணம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.;

Update:2025-10-07 10:50 IST

கோப்புப்படம்

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் (வயது 75) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் 1973 முதல் 1977-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் போட்டியில் ஆடி 2 சதம் உள்பட 866 ரன்னும், 50 விக்கெட்டும், 12 ஒருநாள் போட்டியில் ஆடி 86 ரன்னும், 18 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

பெர்னார்ட் ஜூலியன் 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணியில் முக்கிய பங்களிப்பை அளித்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் அவர் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 27 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் கவுண்டி போட்டியில் கென்ட் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இனவெறி கொள்கையை கடைபிடித்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்திருந்த போது, அதையும் மீறி 1982-83-ம் ஆண்டு அங்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் அங்கம் வகித்ததால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. பெர்னார்ட் ஜூலியன் மறைவுக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்