வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: கருண் நாயரை தாண்டி படிக்கல் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? அகர்கர் விளக்கம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் படிக்கல் இடம்பெற்றுள்ளார்.;

Update:2025-09-26 06:27 IST

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டார்.

இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். அந்த அணியில் 8 ஆண்டுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர் இடம்பெறவில்லை. அவர் மறுபிரவேசம் செய்த இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 4 டெஸ்டில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 205 ரன்களே எடுத்தார். தனது மறுபிரவேச வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத 33 வயது கருண் நாயருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கருண் நாயர் நீக்கப்பட்டு இருந்தாலும் கர்நாடகவை சார்ந்த மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி அனுபவ வீரர் கருண் நாயரை தாண்டி இளம் வீரரான படிக்கல் தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது, “ இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம். அதனை அவர் நிறைவேற்றவில்லை. மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல்லால் கொஞ்சம் அதிகமாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15-20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அதை செய்ய முடியவில்லை.

தேவ்தத் படிக்கல் (இதுவரை 2 டெஸ்ட் ஆடியுள்ளார்) ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் இடம் பெற்று இருந்தார். தர்மசாலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அரைசதம் அடித்தார். அவர் ஓரளவு நன்றாகவே ஆடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் இப்போது படிக்கல் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்ததாலே அவரை மீண்டும் டெஸ்ட் அணிக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று கூறினார்.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்‌ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, என்.ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

Tags:    

மேலும் செய்திகள்