பும்ரா இல்லாத போட்டிகளில் சிறப்பாக பந்துவீச என்ன காரணம்...? முகமது சிராஜ் பகிர்ந்த தகவல்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிராஜ் அற்புதமாக செயல்பட்டிருந்தார்.;

Update:2025-08-26 16:25 IST

image courtesy:PTI

மும்பை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக லண்டன் ஓவலில் நடந்த கடைசி போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 5) வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முன்னிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

முன்னதாக இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடி இருந்தார். 2 போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் பும்ரா இல்லாத 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த 2 போட்டிகளிலும் சிராஜ் அற்புதமாக பந்துவீசியிருந்தார்.

இந்நிலையில் பும்ரா இல்லாத போட்டிகளில் சிறப்பாக பந்துவீச என்ன காரணம்? என்பது குறித்து முகமது சிராஜ் பகிர்ந்துள்ளார். அதில், “பும்ரா போன்ற ஒரு பெரிய வீரர் இல்லாதபோது முழு பொறுப்பும் என் மீது இருக்கும் என்று எனக்கு தெரியும். பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு சாதாரண தொடராக இருந்தாலும், எனது செயல்பாடு எப்போதும் மேம்படுகிறது. பொறுப்பு எனக்கு ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது. எப்பொழுதுமே என்னுடைய அணியில் பொறுப்பை எடுத்து செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையிலே இங்கிலாந்து தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தேன். எட்ஜ்பேஸ்டன் போட்டியின்போது (2-வது டெஸ்ட்) என்னைப் பற்றி நிறைய பேர் விமர்சித்து இருந்தார்கள். அவர்கள் விமர்சனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் சிறப்பாக செயல்பட்டேன். நான் பொதுவாக என்ன செய்கிறேன் என்பதில் மிகவும் விழிப்பாக இருப்பவன், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க மாட்டேன், ஏனெனில் மக்களுக்கு எனது போராட்டம் தெரியாது. இருந்தபோதிலும், அந்த பேச்சு மிகவும் அதிகமாக இருந்ததால், அதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைத்தேன்” என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்