கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.;
கோப்புப்படம்
இந்தூர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வதோதராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (112 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (56 ரன்கள்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. அதேபோல் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடவில்லை. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் கடைசி வரை களத்தில் நின்று 131 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு வில் யங் (87 ரன்கள்), கிளென் பிலிப்ஸ் (32 ரன்கள்) பக்கபலமாக இருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முந்தைய இரு ஆட்டங்களிலும் நல்ல தொடக்கம் கண்டாலும் (26, 24 ரன்கள்) அதனை பெரிய இன்னிங்சாக மாற்றவில்லை. எனவே அவர் நிலைத்து நின்று ஆடினால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தனர். இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் அல்லது புதுமுக வீரர் ஆயுஷ் பதோனி ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் இறங்கும். அந்த அணியில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (215 ரன்கள்), வில் யங், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கைல் ஜாமிசன், கிறிஸ்டியன் கிளார்க் வலுசேர்க்கின்றனர்.
நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை வென்றதில்லை. 2024-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது போல் இந்த தடவை ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதிக்க தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய அணி உள்ளூரில் இருநாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது கிடையாது. இதனால் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.