இந்திய டெஸ்ட், டி20 அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்..?

ஸ்ரேயாஸ் ஐயர் தற்சமயம் இந்திய ஒருநாள் அணியில் மட்டுமே இடம்பெற்று விளையாடி வருகிறார்.;

Update:2025-08-07 16:57 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலமாக பேட்டிங்கில் அசத்தி வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் அவரது தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. இந்த ஐ.பி.எல். சீசனில் 604 ரன்கள் குவித்து அசத்தினார்.

மேலும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து சமீபத்திய தொடர்களிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பை பெறும் அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற முடியாமல் தடுமாறி வருகிறார்.

கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு டி20 போட்டியிலும், 2024-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதன்பின் அந்த வடிவங்களில் அவர் இடம்பெறவில்லை. இருப்பினும் தற்போது தொடர்ச்சியாக அசத்தி வருவதால் இந்திய தேர்வுக்குழு அவரை 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அணியிலும் தேர்வு செய்ய விருப்பம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவரை சேர்க்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் கம்பேக் கொடுப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்