மகளிர் உலகக்கோப்பை; இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் - மிதாலி ராஜ்

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.;

Update:2025-08-12 11:59 IST

Image Courtesy: @ICC

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது,

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

அவர்களது சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், இந்திய அணிக்கு இதைவிட சிறப்பான வாய்ப்பு கிடைக்காது என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்