திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஏமாற்றிய யாஷ் தயாள்..? பெண் பரபரப்பு புகார்

தன்னிடம் யாஷ் தயாளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-29 13:26 IST

image courtesy:PTI

லக்னோ,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து அந்த புகாரில், ''கடந்த 5 வருடங்களாக நானும், யாஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி கொடுத்தார். மேலும், அவரது குடும்ப நபர்களிடம் என்னை 'மருமகள்' என அடையாளப்படுத்தினார். இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன். உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டேன். 5 வருடங்கள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்.

மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகுதான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அவர் மற்ற பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து, ஜூன் 14ஆம் தேதி 181 என்ற பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்தேன். இது குறித்து புகாரும் கொடுத்தேன். ஆனால், எனது புகாரை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர்.

இதனால்தான், தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னிடம் அவருடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதாரமாக உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை அவருக்கு மட்டுமல்ல, இதுபோன்ற ஏமாற்று உறவுகளுக்கு பலியாகிற அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்