இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸி. 225 ரன்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜான் ஜேம்ஸ் 77 ரன்கள் அடித்தார்.;

Update:2025-09-21 13:04 IST

பிரிஸ்பேன்,

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே அலெக்ஸ் டர்னர் கோல்டன் டக் ஆகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன சைமன் பட்ஜும் 4 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்களில் ஸ்டீவன் ஹோகன் (39 ரன்கள்), டாம் ஹோகன் (41 ரன்கள்) மற்றும் ஜான் ஜேம்ஸ் (77 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக பந்துவீசிய இந்தியா தரப்பில் ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளும், கிஷன் குமார் மற்றும் கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்