உலக தடகள சாம்பியன்ஷிப்: முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.;

Update:2025-09-22 06:58 IST

டோக்கியோ,

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நடந்து வந்தது. 9-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர் ஓட்டத்தில் அமெரிக்கா மகுடம் சூடியது.

மழைக்கு மத்தியில் நடத்தப்பட்ட பெண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மெலிசா ஜெபர்சன், திவானிஷா டெர்ரி, கைலா ஒயிட், ஷா காரி ரிச்சர்ட்சன் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 41.75 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தக்க வைத்தது. ஜமைக்கா 2-வது இடத்தை (41.79 வினாடி) பிடித்தது.

இதன் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்கா (வீரர்கள் கிறிஸ்டியன் கோல்மான், கென்னத் பெட்னாரெக், கோர்ட்னி லின்ட்சே, நோவா லைல்ஸ்) தங்கப்பதக்கமும் (37.29 வினாடி), கனடா வெள்ளிப்பதக்கமும் (37.55 வினாடி) கைப்பற்றியது.

பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடத்தை ஆக்கிரமித்தது. கென்யா 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், கனடா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன.

இந்திய தரப்பில் 19 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். எதிர்பார்க்கப்பட்ட ஒரே வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அணியினர் இந்த முறை வெறுங்கையுடன் நாடு திரும்புகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்