குடும்ப சேமிப்பு குறைந்து விட்டதா?

உலகில் தலைசிறந்த தொழில் அதிபர்களின் வெற்றிக்கு பின்னால் சேமிப்பு இருக்கிறது.

Update: 2024-05-24 00:34 GMT

சென்னை,

மக்களின் அன்றாட வாழ்வில் வரவுக்கும், செலவுக்கும் இடையே இருக்கும் மிச்சத்தை எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாக இருக்கிறது. அதனால்தான் சிறு குழந்தைகளுக்கு கூட உண்டியலை கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குகிறார்கள். விவசாயிகள்கூட பயிர் அறுவடையில் கிடைக்கும் வருமானத்தை, அடுத்த சாகுபடி விதைப்புக்கும், மற்ற விவசாய பணிகளுக்கும் சேமித்து வைக்கிறார்கள். ஆக, சேமிப்பு என்பது நமது கலாசாரத்தோடு, வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்டது. சேமிப்பின் அவசியத்தை பல புகழ்பெற்ற அறிஞர்கள்கூட கூறியிருக்கிறார்கள். உலகில் தலைசிறந்த தொழில் அதிபர்களின் வெற்றிக்கு பின்னால் சேமிப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் சேமிப்பு மூலம் அதிக பணத்தை குவித்த புகழ்பெற்ற முதலீட்டாளராக, தொழில் அதிபராக விளங்கும் 93 வயதான வாரன் பப்பெட், "நீ செலவழித்தது போக மீதியை சேமிக்காதே, நீ சேமித்தது போக மீதி எவ்வளவு இருக்கிறதோ, அதை மட்டும் செலவழி" என்று சொன்ன முதுமொழி சேமிப்பின் அவசியத்தை நன்கு உணர்த்துகிறது.

எறும்புகூட மழைக்கால தேவைக்காக உணவை சேமிக்கிறது. அதுபோல, மக்களும் தங்கள் முதுமை காலத்துக்காக மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்காகவும், குறிப்பாக மருத்துவ செலவுக்காகவும் பல்வேறு வகைகளில் சேமித்து வைக்கிறார்கள். தபால் அலுவலகங்களில், வங்கிகளில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணத்தை போடுகிறார்கள். மூத்த குடிமக்கள்தான் அதிக அளவில் இந்த சேமிப்பு திட்டங்களில் இணைகிறார்கள். இந்த சேமிப்புதான் அவர்கள் வாழ்வின் பாதுகாப்பு. முதுமையில் நிம்மதியாகவும், நிதி பாதுகாப்புடனும் வாழ இந்த சேமிப்புகள்தான் கை கொடுக்கிறது.

ஆனால், இந்த சேமிப்புகளெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது குறைந்து வருவதாக தேசிய தரவுகள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2020-2021-ல் ரூ.23 லட்சத்து 29 ஆயிரத்து 671 கோடியாக இருந்த குடும்ப சேமிப்பு 2021-2022-ல் ரூ.17 லட்சத்து 12 ஆயிரத்து 704 கோடியாகவும், 2022-23-ல் ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 447 கோடியாகவும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால், அவர்கள் சேமிப்பை கைவிட்டுவிட்டார்கள் என்று பொருளல்ல. சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவு என்பதால், அவர்கள் அதிக வருவாயைத் தேடி தங்கள் சேமிப்பை ரியல் எஸ்டேட், அதாவது வீடு, மனைகள், நிலங்கள் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கம், பங்குகள், மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்கிறார்கள். இப்போது சேமிப்பு குறைந்து, முதலீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மக்கள் வீடு, மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்காக நிறைய கடன்கள் வாங்குகிறார்கள் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக தனி நபர் கடன்களையும் வங்கிகளில் வாங்குகிறார்கள். அதற்கான மாதாந்திர தவணை கட்டுவதாலும் சேமிப்பு குறைந்துவிட்டது.

பங்குகள், மியூச்சுவல் பண்டுகள் போன்றவற்றுக்கான முதலீடுகள், 'வந்தால் லாபம்' என்ற வகையில்தான் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், சேமிப்புதான் நிரந்தரமானது, பாதுகாப்பானது. மக்களின் சேமிப்பு அரசுக்கும் பயனளிக்கும். எனவே, சேமிப்பும் அதிக முக்கியமானது. பல்வேறு வகையான சேமிப்புகளில் மீண்டும் மக்கள் அதிகம் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து டெபாசிட்டுகளுக்கும் கூடுதல் வட்டியும், அதில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு அதிக அளவில் வருமான வரி சலுகைகளும் அளிக்கவேண்டும். பல்வேறு முதலீடுகளும் தேவைதான். ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு துணை நிற்கும் சேமிப்பும் எந்த வகையிலும் குறைந்துவிடக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்