நாடாளுமன்ற தேர்தல்: மனைவிக்கு சீட் கிடைக்காததால் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.


நாடாளுமன்ற தேர்தல்: மனைவிக்கு சீட் கிடைக்காததால் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
x

எம்.எல்.ஏ. பாரத் சந்திர நாரா, தன் மனைவிக்கு லக்கிம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார்.

கவுகாத்தி:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி ஒப்பந்தம், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன. மாநிலங்களின் கள நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதில், வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் அணி மாறுவது மற்றும் கட்சி தாவும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

அவ்வகையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், தன் மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரசில் இருந்து விலகியிருக்கிறார்.

லக்கிம்பூர் மாவட்டம் நவ்பாய்சா தொகுதி எம்.எல்.ஏ.வான பாரத் சந்திர நாரா, தன் மனைவி ராணி நாராவுக்கு லக்கிம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. வேட்பாளராக உதய் சங்கர் ஹசாரிகா அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியில் இருந்த பாரத் சந்திர நாரா, காங்கிரசில் இருந்து விலகுவதாக கூறி கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று ஒரு வரியில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்திய தேசிய காங்கிரசில் இருந்து இப்போதே விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அசாம் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.


Next Story