திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் - டிரோன்கள் பறக்கத் தடை


திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் - டிரோன்கள் பறக்கத் தடை
x

கோப்புப்படம் 

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்தடைந்தார்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். திருவண்ணாமலையை அடுத்த சோமாசிப்பாடி அருகில் உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார்.

அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி திருவண்ணாமலையில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story