குழாய்கள் மூலம் குடிநீர் தர முடியாதவர்கள் கேஸ் தருவதாக கூறுவது வேடிக்கை - ப.சிதம்பரம் பேட்டி


குழாய்கள் மூலம் குடிநீர் தர முடியாதவர்கள் கேஸ் தருவதாக கூறுவது வேடிக்கை - ப.சிதம்பரம் பேட்டி
x

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்வதாகக் கூறுவது வேடிக்கை. நாட்டில் 5 சதவீத பேர் மட்டுமே ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது.

பா.ஜ.க. அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு. 4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது. 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது. வேளாண் விளைப்பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல.

அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்ற பா.ஜ.க. வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.


Next Story