ஓ.பி.எஸ். பெயரில் பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்: வாக்காளர்கள் குழப்பம்
ராமநாதபுரம் தொகுதியில், ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் தனித்தனியே ஒட்டப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், அதே பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர். தனக்கு எதிராக சிலர் சதிச்செயலில் ஈடுபடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் பெயர் கொண்ட பிற சுயேட்சை வேட்பாளர்கள் திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர். அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதியில், ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் தனித்தனியே ஒட்டப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், சின்னத்தை தவிர அனைத்து சொற்களும் ஒரே மாதிரியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அவரின் பெயரிலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது வாக்காளர்களை குழப்பமடைய செய்துள்ளது.