பா.ஜ.க. அரசில் பயங்கரவாதிகள் அவர்களுடைய சொந்த நாட்டிலேயே கொல்லப்பட்டனர்: பிரதமர் மோடி பேச்சு
நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை எங்களுடைய வலிமையான அரசு உறுதி செய்தது என்று பிரதமர் மோடி பிரசாரத்தின்போது பேசியுள்ளார்.
டேராடூன்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று, உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்கும் முடிவானது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் கீழ் எடுக்கப்பட்டது. பா.ஜ.க.வின் 10 ஆண்டு கால அரசில், பயங்கரவாதிகள், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே கொல்லப்பட்டனர்.
உரி தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல் ஆகியவற்றை சுட்டி காட்டி பிரதமர் பேசியுள்ளார். பாகிஸ்தானின் பாலகோட்டில் பதுங்கி இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினர் மீது, இந்திய விமான படையின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகள் பொழிந்து தாக்குதல் நடத்தியது.
இதுபோன்ற பெரிய முடிவுகள் தன்னுடைய அரசின் கீழ் எடுக்கப்பட்டன என அவர் பேசியுள்ளார். நாட்டில் ஒரு வலிமையான அரசு இன்று உள்ளது. போர் மண்டலத்தில் கூட இந்தியாவின் மூவர்ண கொடியானது, பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்க கூடிய ஒன்றாக உள்ளது.
7 தசாப்தங்களுக்கு பின்னர், காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. முத்தலாக்கிற்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை எங்களுடைய வலிமையான அரசு உறுதி செய்தது என்று பேசியுள்ளார்.