சபரிமலை 18 படிகளின் மகத்துவம்


சபரிமலை 18 படிகளின் மகத்துவம்
x

சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கலியுக வரதனாக அய்யப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18 படிகளாக விளங்குகிறது. சபரிமலையில் 18 படிகள் ஏறி அய்யப்பனை தரிசித்தால் அந்த பக்தரின் வாழ்க்கையில் அய்யப்பன் படிப்படியாக உயர்வை தருவான் என்பது நம்பிக்கை. இந்த 18 படிகளும் 18 விதமான குணங்களை குறிப்பதாகவும், 18 தேவதைகள் இந்த படிகளில் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் சபரிமலை தனிச்சிறப்புடன் விளங்குகிறது. இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18 படிகளில் ஏற முடிவதில்லை. இருமுடி சுமந்து சென்று 18-ம் படியேறி அய்யப்பனை தரிசனம் செய்வதே சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசனம் செய்தால்தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோவில் சென்று வந்ததன் முழு பலன்களையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்டபோது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு அய்யப்பனைத் தாங்கி நின்றான். வன்புலி வாகனன் என்று நாம் அய்யப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே. உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

18 படிகளுக்குக் காவலாக கடூரவன் என்ற கடுத்த சுவாமியும், கருப்ப சுவாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது. சபரி மலையின் மணிகண்டனின் அங்கரட்சகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.

கன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும் கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள். சபரிமலையை சுற்றியும் உள்ள 18 மலைகளும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.


Next Story