மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதாக மோசடி: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது ரூ.13 லட்சம் பறிமுதல்


மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதாக மோசடி: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது ரூ.13 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Nov 2017 8:30 PM GMT (Updated: 29 Nov 2017 4:00 PM GMT)

பாளையங்கோட்டையில், மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில், மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் அறக்கட்டளை

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் பாளையங்கோட்டை சாந்திநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு கடன் கொடுக்கப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் கடன் பெறுவதற்கு, தங்கள் ஆதார் எண்ணுடன், ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள், அவரிடம் பணம் செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் கடன்

பதிவு செய்த பெண்களுக்கு நேற்று முன்தினம் ரூ.1 லட்சம் பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடன் பெற விரும்புபவர்கள் ரூ.3,200 கட்ட வேண்டும் என மீண்டும் அவர் அறிவித்திருந்தார். இதை நம்பி, அவரது அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் குவிந்தனர். பணம் கட்டிய பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.

4 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக ரவி (43), பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயாண்டி மனைவி சித்ரா (26), மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த கணேசன் (28), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சேர்ந்த ராமலட்சுமி (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story