5-வது நாளாக பலத்த மழை கடல் சீற்றத்தால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


5-வது நாளாக பலத்த மழை கடல் சீற்றத்தால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 29 Nov 2017 9:20 PM GMT)

சீர்காழி பகுதியில் 5-வது நாளாக பலத்த மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்தால் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

திருவெண்காடு,

இலங்கைக்கு மிக அருகே வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 25-ந் தேதி முதல் நாகை மாவட்டம் பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய-விடிய மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று 5-வது நாளாக பலத்த மழை பெய்தது.

நெல் நாற்றுகள் மூழ்கின

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து 10 நாட்கள் மழை பெய்தது. இதனால் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதனால் வேளாண்மை துறையினர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை குறுகிய கால பயிர்களை பயிரிட கேட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து பூம்புகார், திருவெண்காடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வயலில் மழைநீர் வடிந்ததும் குறுகிய கால பயிரான ஏ.டி.டி.45 நெல் ரகத்தை நேரடி சேற்று விதைப்பு செய்தனர். ஆனால் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால், முளைத்து காணப்பட்ட நெல் நாற்றுகள் மழைநீரில் மூழ்கி உள்ளன.

இதுகுறித்து பூம்புகார், திருவெண்காடு பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது 2-வது முறையாக குறுகிய கால நெல் விதைகளை சேற்று விதைப்பு மூலம் நேரடி விதைப்பு செய்தோம். இதனை தொடர்ந்து நெல் நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தது. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழையால், நாற்றுகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையுடன் உள்ளனர். கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே வருங்காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை உரிய காலத்தில் திறக்க வேண்டும். அப்போது தான் விவசாயம் பாதிக்கப்படாது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

தொடர் மழையின் காரணமாக பூம்புகார், தரங்கம்பாடி, பழையாறு, திருமுல்லைவாசல், தொடுவாய், கீழமூவர்க்கரை, வாணகிரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் கடலில் சிறிது தூரம் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது.

சாலை சேதம்

கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் இருந்து காந்தி நகர் வழியாக ஆலங்காடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை 3 கி.மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலை சேதமடைந்து கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், வடகால்-ஆலங்காடு இடையேயான சாலையில் தண்ணீர் தேங்கி மேலும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story