சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு


சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 17 Sep 2018 11:00 PM GMT (Updated: 17 Sep 2018 8:10 PM GMT)

சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் வீட்டுமனை பட்டா, சாலை சீரமைப்பு, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, கவுசிகா நதி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆற்று மணல், செம்மண், வண்டல் மண் உள்ளிட்ட மணல் திருட்டு தங்கு தடையின்றி தாராளமாக நடைபெற்று வருகிறது. இயற்கை வளம் சூறையாடப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் திருட்டை தடுக்க வேண்டும்.

சூலூர் தாலுகா, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பேரூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளில் வெடிவைத்து தகர்த்து ஜல்லி, எம்.சேண்ட் மற்றும் கிராவல் மண் எடுத்துகேரளாவுக்கு லாரி மூலம் கடத்தப்படுகிறது. இதை தடுத்து, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கனிமவளத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவையில் கடந்த 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நூருல்லா, சையது அபுதாகிர், சதாம் உசேன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், மீண்டும் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எங்களை அலைக் கழித்து, மனரீதியாக துன்புறுத்தினர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே என்.ஐ.ஏ., விசாரணை குழு அதிகாரியான சவுகத் அலி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அவர்கள் கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கோவை நாகராஜபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் நிரப்ப வில்லை. இதனால் அந்த தொட்டி தற்போது பழுதடைந்து உள்ளது. எனவே மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பறை தற்போது சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளின் கழிவறையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story