கோபி, சிவகிரியில் பறக்கும் படை வாகன சோதனை: உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சம் பறிமுதல்


கோபி, சிவகிரியில் பறக்கும் படை வாகன சோதனை: உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2019 4:45 AM IST (Updated: 17 March 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

கோபி, சிவகிரியில் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி தேர்தல் அதிகாரி அன்பழகன் மற்றும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கோபி கொளப்பலூர் ரோட்டில் காமராஜ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 820 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் டிரைவர் பெயர் மணிகண்டன் (வயது 30) என்பதும், அவர் கோழிகளை விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 820–ஐ கொண்டு வருவதாகவும் கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 820 ரூபாயை பறிமுதல் செய்தார்கள்.

அதன்பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். இந்த சோதனையில், தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அந்தப்பணத்துக்கான உரிய ஆவணம் அந்த காரில் இருந்தவரிடம் இல்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேற்கொண்டு அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் காரில் வந்தவர் கரூர் மாவட்டம் கடவூர் மொட்ட காமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முருகன் (39) என்பதும், ஊட்டியில் லாரி வாங்கச்சென்றுவிட்டு விலை படியாததால் லாரி வாங்காமல் அங்கிருந்து கரூருக்கு புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மொடக்குறிச்சி தாசில்தார் அஷ்ரப் புன்னிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மட்டும் சிவகிரி மற்றும் கோபியில் விதிமுறை மீறி கொண்டுசெல்லப்பட்ட 5 லட்சத்து 18 ஆயிரத்து 820 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story