பெருந்துறை அருகே வீட்டு வாசலில் சிறுமியை தாக்கி தாயிடம் 11 பவுன் நகை பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெருந்துறை அருகே வீட்டு வாசலில் சிறுமியை தாக்கி தாயிடம் 11 பவுன் நகையை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு அருகே லேனா அவன்யூ என்ற இடம் உள்ளது. ஈரோடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 41). இவருடைய மனைவி சவீதா (35). மகள் செல்லவர்ஷினி (12).
பிரகாஷ் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு 7.30 மணி அளவில் வீட்டின் வாசலில் சவீதா, செல்லவர்ஷனி மற்றும் பக்கத்து வீட்டு குழந்தைகள் சபரி, ஐஸ்வர்யா ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீட்டின் இருபக்கமும் தோட்டம் உள்ளது.
இந்தநிலையில் தோட்டத்தில் இருந்து வீட்டு சுற்றுச்சுவர் ஏறி சவீதாவின் வீட்டு வாசலில் 2 மர்ம நபர்கள் உள்ளே குதித்தனர். அவர்கள் துணி கட்டி முகத்தை மூடியிருந்தார்கள். கையில் மரக்கட்டை வைத்திருந்த அவர்கள், சவீதாவின் அருகே வந்து நகைகளை கழற்றித்தருமாறு மிரட்டினார்கள். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். உடனே முகமூடி கொள்ளையனில் ஒருவன் அருகே நின்றுகொண்டு இருந்த செல்லவர்ஷினியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தார்.
இதனால் பயந்துபோன சவீதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, 5 பவுன் வளையல்கள் ஆகியவற்றை கழற்றிக்கொடுத்தார். நகையை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள் வந்த வழியே மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்கள்.
இதுகுறித்து உடனடியாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார். கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் காயமடைந்த செல்லவர்ஷினி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சிறுமியை தாக்கி, தாயிடம் முகமூடி கொள்ளையர்கள் 11 பவுன் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.