கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. பிரமுகர் பரபரப்பு சாட்சியம்; விசாரணை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. பிரமுகர் பரபரப்பு சாட்சியம்; விசாரணை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 10:44 PM GMT (Updated: 12 Oct 2020 10:44 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் பரபரப்பு சாட்சியம் அளித்தார். விசாரணை 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை சிறையில் இருந்து சயான், மனோஜ், உதயகுமார், பிஜின், ஜித்தின்ராய், மனோஜ்சாமி ஆகிய 6 பேரை போலீசார் அழைத்து வந்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமினில் இருக்கும் சம்சீர் அலி, சதீசன், சந்தோஷ் சாமி, திபு ஆகிய 4 பேர் ஆஜரானார்கள். மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ரவி என்பவர் சாட்சியம் அளித்தார். அதில் அவர் கூறும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அசோக்குமார் என்பவர் மூலம் தனக்கு அறிமுகமானார். அ.தி.மு.க.வின் அரசியல் தகவல்களை கனகராஜ் அவ்வப்போது எனக்கு தெரிவித்து வந்தார். கடந்த 28.4.2017-ந் தேதி கோவையில் உள்ள ஒரு வணிக வளாக தியேட்டரில் பாகுபலி படம் பார்த்து கொண்டு இருந்தபோதுதான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கனகராஜ் குடிபோதையில் உளறினார். அப்போது நான் கோவையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் முன்பு சரண் அடையும்படி தெரிவித்தேன். அதற்கு அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் சரண் அடைவதாக தெரிவித்தார். அதன்பிறகு வாகன விபத்தில் கனகராஜ் இறந்து விட்டதை அறிந்தேன் என்று நீதிபதியிடம் கூறினார்.

அப்போது எதிர்தரப்பு வக்கீல்கள் ஆனந்த், விஜயன் ஆகியோர் குறுக்கிட்டு 28.4.2017-ந் தேதி கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அப்படி இருக்கும்போது அ.தி.மு.க. பிரமுகரை தொடர்பு கொண்டு எப்படி பேசியிருக்க முடியும். நீங்கள் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் என்பதால் போலீசாருக்கு சாதகமாக சாட்சி அளிக்கிறீர்களா? என்று விசாரணை செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி அரசு டாக்டர் வாசன், தலைமை காவலர் சதாம் உசேன், சி.சி.டி.வி. கேமரா சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகிய 3 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாலநந்தகுமார் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான திராவிடமணி ஊட்டி கோர்ட்டுக்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவர் கூறும்போது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சரியான வழியில் நடக்க வேண்டும். விசாரணையில் நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்றார்.


Next Story