தென்காசி பகுதியில் தேர்தல் பிரசாரம்: தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; கனிமொழி எம்.பி. பேச்சு
சட்டசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
தி.மு.க. சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர், குற்றாலம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. கொடி ஏற்றினார். அப்போது அங்கு நின்ற பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தென்காசி காட்டுபாவா பள்ளிவாசல் அருகில் அமைக்கப்பட உள்ள சுதந்திர போராட்ட வீரர் அப்துல் சலாம் நினைவு தூணுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கனிமொழி எம்.பி. திறந்த வேனில் நின்று பேசியதாவது:-
தியாகிகள் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்து பெற்று கொடுத்த சுதந்திரம், உரிமைகள் அனைத்தையும் மத்திய பா.ஜனதா அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. மேலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவாக உள்ளது. மத்திய அரசின் பினாமியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. விவசாயிகள், சிறுபான்மையினரின் கோரிக்கைகள், தமிழ் மொழி புறக்கணிப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் தமிழக மக்களின் நலன்களை மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது.
விரைவில் தீர்வு
தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி உள்ளார். ஆனால் அதற்கான பணிகள் விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பின்னர்தான் தொடங்கும். முதல்-அமைச்சர் எப்போதும் அடிக்கல் நாயகனாகத்தான் உள்ளார்.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் 3 குளங்களுக்கு நடுவில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி, நீதிமன்றம் வரையிலும் சென்று முறையிட்டு, தற்போது மாற்று இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய பின்னரே தீர்வு ஏற்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை ைகப்பற்றும். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துரையாடல்
பின்னர் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்ேபாது, அவர் கூறுகையில், தி.மு.க. ஆட்சியில்தான் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நெசவாளர்கள் மட்டுமின்றி அனைத்து தொழில் துறையினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும். நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக தி.மு.க. உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி., பூங்கோதை எம்.எல்.ஏ., நகர செயலாளர் சாதிர், 12-வது வட்ட செயலாளர் பீர் முகம்மது, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மகுது மீரான், நகர செயலாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம்
முன்னதாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் பொதுக்கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நடந்தது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சைபுன்னிசா சேகனா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சேக் உதுமான் என்ற சேகனா வரவேற்றார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் துரை தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரசாக், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் செரிப், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவுத், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுந்தர மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story