ஒரத்தநாடு தொகுதி வளர்ச்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவேன் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்


ஒரத்தநாடு தொகுதி வளர்ச்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவேன் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 12:35 PM GMT (Updated: 29 March 2021 12:35 PM GMT)

ஒரத்தநாடு தொகுதி வளர்ச்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்குறுதி அளித்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஒரத்தநாடு தொகுதியில் உள்ள கக்கரை, பொட்டலாங்குடிக்காடு, பூவத்தூர், குடிக்காடு, பானாம்புத்தூர், புதூர், ஆர்.வி.நகர். செம்மனங்குட்டை, தென்னமநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திறந்த  ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் நான் 4 முறை போட்டியிட்டு 3 முறைவெற்றி பெற்றுள்ளேன். கடந்த முறை வெற்றிவாய்ப்பை இழந்தாலும் 2 நாளில் என்னை எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. 75 ஆண்டுகளாக விவசாயத்தை நம்பி உள்ள இந்த மாவட்டத்தில் விவசாய கல்லூரி இல்லாமல் 
இருந்தது. 

அந்த கல்லூரியை ஈச்சங்கோடடையில் கொண்டு வந்தேன். தமிழகத்தில் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி இருந்தது. 3-வது கல்லூரியாக ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தேன்.

தஞ்சையை மாநகராட்சியாக தரம் உயர்த்தினேன். செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி கொண்டு வந்தேன். திருவோணம், திருவையாறில் ஐ.டி.ஐ., பேராவூரணியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாபநாசத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை கொண்டு வந்தேன்.

எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்யும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திருமண மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளேன்.  நான் பலரின் வளர்ச்சியை தடுத்து விட்டேன் என்று தவறான செய்தியை பரப்புகிறார்கள். காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகராக அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். நான் அமைச்சராவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் கட்சியில் இருந்த உறுதிபாடு, தலைமை மீது கொண்ட பற்று என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது. யாரும் ஒருவர் வளர்ச்சியை, உண்மையாக உழைத்தால் கெடுக்க முடியாது. நான் இந்த தொகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.

ஒரத்தநாடு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ள பல திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், போக்குவரத்து வசதியை மேம்படுத்த பாபடுவேன்.

நான் பிறருக்கு உதவி செய்வது அவர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால் அது எனக்கு வளர்ச்சியாக இருக்கும். நான் கட்சி பாகுபாடு பார்க்காமல் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளேன். இதை யாரும் மறுக்க முடியாது.  இந்த பகுதியில் நிறைய பேர் படித்தவர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்கள் போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஒரத்தநாட்டில் இலவச பயிற்சி மையத்தை எனது சொந்த செலவில் அமைப்பேன்.

ஒரத்தநாட்டில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். நான் வெற்றி பெற்றால் ஒரே நிமிடத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க முடியும்.  வேறு யார் வெற்றி பெற்றாலும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். எனவே யார் இதற்கு தகுதியானவர் என எதிர்பார்த்து எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story