‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா


‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா
x
தினத்தந்தி 12 Sep 2018 11:45 PM GMT (Updated: 12 Sep 2018 9:03 PM GMT)

ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

லண்டன்,

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா.

வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவரை நாடு கடத்தக் கோரும் வழக்கின் விசாரணை, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் தொடங்கியது.

கடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின்போது, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால், அவரை அடைக்க உள்ள மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலின் வீடியோவை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி எம்மா அர்புத்நாட், இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஜெயில் வீடியோ, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெயில் வீடியோவை நீதிபதி ஆய்வு செய்வதற்காக, இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஆஜராவதற் காக, விஜய் மல்லையா வந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது, அவரை நிருபர்கள் அணுகினர். அப்போது, “வெளிநாட்டுக்கு செல்லுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா?” என்று கேட்டனர்.

அதற்கு விஜய் மல்லையா கூறியதாவது:-

ஜெனீவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இது உண்மை.

நான் அரசியல்வாதிகளின் கால்பந்து என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். அதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எனது மனசாட்சி தெளிவாக உள்ளது.

சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள எனது சொத்துகளை பட்டியலிட்டு, கடந்த ஜூன் 22-ந் தேதி, கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தேன். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக கோர்ட்டு மேற்பார்வையில் அந்த சொத்துகளை விற்று, கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு அம்மனுவில் கூறி இருக்கிறேன். அதை நீதிபதி சாதகமாக பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.

கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சிகளுக்கு வங்கிகள் ஏன் ஒத்துழைக்கவில்லை என்று வங்கிகளை ஊடகங்கள் கேட்க வேண்டும். நிச்சயமாக நான் ஒரு பலி ஆடுதான். அப்படித்தான் நான் கருதுகிறேன். எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை.

என்னை அடைப்பதாக சொல்லப்படும் மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் வீடியோ, ‘பிரமாதமாக’ (கேலியாக சொன்னார்) இருக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்ப வில்லை. கோர்ட்டில் நடப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இவ்வாறு விஜய் மல்லையா கூறினார்.

தான் சந்தித்த நிதி மந்திரியின் பெயரை விஜய் மல்லையா கூறவில்லை. இருப்பினும், அவர் தப்பிச்சென்ற 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், தற்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லிதான், அப்போதும் அப்பதவியில் இருந்தார்.

விஜய் மல்லையா பேட்டி வெளியானதும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அதற்கு விளக்கம் அளித்தார். தன்னை முறைப்படி சந்திக்க விஜய் மல்லையாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று அவர் கூறினார்.

அதே சமயத்தில், லண்டன் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்ததாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

மதிய உணவு இடைவேளையில் நான் நின்று கொண்டிருந்தபோது, நான் வெளிநாடு சென்றதற்கான சூழ்நிலை பற்றிய கேள்விக்கு பதில் அளித்தேன். நான் நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்தேன். லண்டனுக்கு செல்வதாக கூறினேன். அது முறைப்படியான சந்திப்பு அல்ல. இந்த விவகாரத்தை சர்ச்சை ஆக்குவது சரியல்ல. நான் அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், மைய மண்டபத்திலும் அடிக்கடி சந்தித்துள்ளேன்.

என்னை வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லுமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. ஓடவேண்டிய அவசியமும் இல்லை. இதெல்லாம் ஊடகங்கள் உருவாக்கிய குற்றச்சாட்டுகள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் ஆஜரான அவரது வக்கீல்கள், “சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்த ஆதாரங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு” என்று வாதிட்டனர்.

மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் புதிதாக பெயிண்ட் அடித்து பளபளப்பாக மாற்றி உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

“கடனை திருப்பிச் செலுத்தும் எண்ணமே விஜய் மல்லையாவுக்கு இல்லை” என்று அரசுத்தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்மா, விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி டிசம்பர் 10-ந் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார்.


Next Story