சபைக்கு வராத எம்.எல்.ஏ.க்களின் கள்ள கையெழுத்தை போட்டது, காங்கிரஸ் - பாரதீய ஜனதா பகீர் குற்றச்சாட்டு


சபைக்கு வராத எம்.எல்.ஏ.க்களின் கள்ள கையெழுத்தை போட்டது, காங்கிரஸ் - பாரதீய ஜனதா பகீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 10:24 PM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் மசோதா நிறைவேற, சபைக்கு வராத எம்.எல்.ஏ.க்களின் கள்ள கையெழுத்தை காங்கிரஸ் போட்டுள்ளது என பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது.

230 இடங்களை கொண்ட சட்டசபையில் அந்தக் கட்சிக்கு 114 இடங்கள் கிடைத்தது. அவர்களுடன் 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், 1 சமாஜ்வாடி எம்.எல்.ஏ., என 121 பேர் ஆதரவுடன் முதல்-மந்திரி கமல்நாத் ஆட்சி அமைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை, அந்த மாநில சட்ட சபையில், குற்றவியல் சட்ட (மத்திய பிரதேச திருத்தம்) மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. சபாநாயகர் தவிர்த்து 120 ஓட்டுக்கள் விழுந்திருக்க வேண்டும். ஆனால் 122 ஓட்டுக்கள் விழுந்து மசோதா நிறைவேறியது.

பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என கூறப்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு முதல்-மந்திரி கமல்நாத் பேட்டி அளித்தார். இது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சி மீது எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா (பா.ஜனதா) நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

அந்த மசோதா கடந்த புதன்கிழமை ஓட்டெடுப்புக்கு விடப் பட்டபோது, சட்டசபைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 முதல் 12 பேர் வரவில்லை.

அவர்களது கையெழுத்து கள்ளத்தனமாக காங்கிரசால் போடப்பட்டுள்ளது என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இப்போதுதான் நாங்கள் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிரச்சினையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என நாங்கள் முறையிடலாம்.

ஓட்டெடுப்புக்கு பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு விட்டதால், இந்த பிரச்சினையை நாங்கள் எழுப்ப முடியாமல் போய் விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் கருத்து தெரிவிக்கையில், “கோபால் பார்கவா ஓட்டெடுப்பின்போது சபையில்தானே இருந்தார்? அவர் ஓட்டெடுப்பை சோதித்து இருக்கலாம். அவரை யாரும் தடுக்கவில்லை. இப்போது ஏன் புகார் கூறுகிறார்? உள்ளதைச்சொல்வதானால், அவர்கள் எம்.எல்.ஏ.க்கள்தான் 50 பேர் சபைக்கு அன்று வரவில்லை. பாரதீய ஜனதா கட்சிக்கு பொய் சொல்வதே வழக்கமாகப் போய்விட்டது” என்று கூறினார்.


Next Story