காஷ்மீர் மக்கள் குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்- உள்துறை அமைச்சகம்


காஷ்மீர் மக்கள் குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்- உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:50 AM GMT (Updated: 29 Aug 2019 4:50 AM GMT)

காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்தவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதற்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெருவாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அங்கு வாழும்  மக்களுக்கு உரிமை உண்டு. மேலும், இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து ஆகஸ்ட் 27-ம் தேதி உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த அறிவிப்பில் அவர் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அவரது ராஜினாமா விண்ணப்பம் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த கண்ணன் ”காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 20 நாட்களுக்கும் மேலாகியும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, காஷ்மீர் மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில், என்னால் எனது பணியை மீண்டும் தொடர முடியும் என எனக்கு தோன்றவில்லை” என அவர் கூறியுள்ளார்.

Next Story