வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதில்லை - ராகுல் காந்தி


வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதில்லை - ராகுல் காந்தி
x

இந்திய வரலாற்றில் முதன்முறையாக நமது விவசாயிகள் வரி கட்டுகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை. ஆனால், அதை செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள் காணப்பட மாட்டார்கள். நாட்டின் ஊடகங்கள் வெறும் 15 - 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் இரவும் பகலும் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடுகிறார்கள். ஊடகங்களில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள். நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என நமது விவசாயிகள் கேட்கிறார்கள். வேலைவாய்ப்பு வேண்டும் என நமது இளைஞர்கள் கேட்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என நமது பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் என்கிறார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக நமது விவசாயிகள் வரி கட்டுகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவர்களின் வேலை. 20 தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஒருபுறம் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பணம் பெற்றுள்ளது. மறுபுறம் காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியில், நாட்டின் இளைஞர்களுக்கு பயிற்சிக்கான உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகிறோம். ஓர் ஆண்டு கால பயிற்சியின்போது அவர்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். சிறப்பாக பணியாற்றினால் அவர்களுக்கு வேலை உறுதி" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story