நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் - பா.ஜ.க. குற்றச்சாட்டு


நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் - பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 April 2024 11:15 AM GMT (Updated: 18 April 2024 11:34 AM GMT)

மக்களவை தேர்தலில் தோல்வியை உணர்ந்துள்ள நிலையில், ஓட்டுகளுக்காக நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

சத்தீஷ்காரில் நேற்று முன்தினம் நக்சலைட் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.இந்தநிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கடந்த மூன்று தசாப்தங்களாக நக்சலைட்டுகள் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய என்கவுண்டரில் நேற்று முன்தினம் 29 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது உண்மையில் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய சாதனை. நக்சலைட்டுகளை காங்கிரஸ் தியாகிகள் என்று கூறுவது நினைத்துகூட பார்க்க முடியாதது. இது நமது பாதுகாப்புப் படையினரின் துணிச்சலை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நக்சலைட்டுகளை தியாகிகள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் வர்ணித்து அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்தியக் கூட்டணியின் உண்மையான முகத்தை ஷ்ரினேட் அம்பலப்படுத்தி விட்டார். மக்களவைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்து, நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் நிற்கிறார்கள். மோடியை எதிர்க்க பயங்கரவாதிகளுக்கு கூட துணை நிற்க அவர்கள் தயங்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story