காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை


காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை
x

கோப்புப்படம்

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காக தெஹ்ரீக்-இ-ஹுரியத் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்கு பயங்கரவாதத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்வதில்லை என்ற மோடி அரசின் கொள்கைப்படி, இந்தியாவுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி வருகிறார்.

இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த தெஹ்ரிக் இ ஹூரியத் என்ற பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா சட்டம்) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த சையது அலி ஷா கிலானியால் தொடங்கப்பட்ட இயக்கம்தான், தெஹ்ரிக் இ ஹூரியத் ஆகும். அவர் 2021-ம் ஆண்டு மறைந்த பிறகு, மசரத் ஆலம் பட் என்பவர் தலைவராக இருக்கிறார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். அவர் தலைமை தாங்கிய ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் என்ற அமைப்புக்கு கடந்த மாத தொடக்கத்தில் தடை விதிக்கப்பட்டது.


Next Story
  • chat