மாநில செய்திகள்

தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-அமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை + "||" + Stop the Sri Lankan government's actions that deprive Tamils of their rights - KS Alagiri's request to the Chief Minister

தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-அமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-அமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை
தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, 

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நடைபெற்றுவரும் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் தமிழர்களின் உரிமைகளையும் , அடையாளங்களையும் அழிக்கிற நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறன. இதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிவருகிற குரலை புறக்கணிக்கிற வகையில் இலங்கை அரசு அலட்சியப்போக்குடன் நடந்து வருகிறது. சமீபத்தில் கொழும்புவில் உள்ள  இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கிற தமிழ் மொழி அகற்றப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக சீன மொழியான மாண்டரின் வார்த்தைகள்  சேர்க்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் வாழுகிற தமிழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் ஏற்கனவே இருந்த கல்வெட்டு அகற்றப்பட்டு புதிய கல்வெட்டு திறப்பு விழாவில் சீன நாட்டின் இலங்கை தூதர் பங்கேற்று அதில் சிங்களம், ஆங்கிலம், மாண்டரின் மொழிகள் தான் இடம்பெற்றிருந்தன. இதில் திட்டமிட்டு தமிழ் மொழி அகற்றப்பட்டுள்ளது. 

1956 இல் சிங்களமொழி ஏகபோக சட்டத்தை அன்றய பிரதமர் பண்டாரநாயக்க கொண்டு வந்து நிறைவேற்றியதும் அதை எதிர்த்து இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்பிரச்சனையை தீர்க்க அன்றைய இந்திய அரசு தலையிட்டு  பண்டாரநாயக்காவுக்கும், தமிழர் தலைவர் செல்வநாயகாவுக்கும் 1957 இல் ஒரு ஒப்பந்தம் உருவானது. அதை செயல்படுத்த விடாமல் இலங்கை அரசு தடுத்து விட்டது. அதையொட்டி 1965 இல் இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க அன்றைய இலங்கை பிரதமர் சேனநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் மறுபடியும் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தமும் செயல்படவில்லை. 

அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த சூழலில் இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை போக்க தமிழக அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசின் முதலமைச்சராக வரதராஜ பெருமாள் பொறுப்பேற்றார். இதுதான் இலங்கையில் மலர்ந்த முதல் தமிழர் ஆட்சியாகும். மேலும் 1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அநீதி களையப்பட்டு தமிழும் ஆட்சிமொழி என்ற சம உரிமை பெற்றது. 

அமரர் ராஜீவ் காந்தி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இலங்கை பாராளுமன்றத்தில் 1987 இல் பதிமூன்றாவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் தமிழர்களின் உரிமைகள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டவாறு பாதுகாக்கப்பட்டது. இன்றைக்கும் தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் பதிமூன்றாவது திருத்தம் தான். அதை பெற்றுத்தந்தவர் அமரர் ராஜீவ் காந்தி. அந்த சட்ட திருத்தத்தின்  அடிப்படையில் சிங்களத்துக்கு இணையாக தமிழும் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிக்கிற வகையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பதவியேற்றபோது அதிபர் ராஜபக்சேவை வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அன்று பதவியேற்றுக்கொண்டதை எவரும் மறந்திட இயலாது. பா.ஜ.க. ஆட்சியின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக 136 கோடி மக்கள் தொகை கொண்ட உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிற இந்தியாவை 2 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இலங்கை நாடு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. மாறாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

சமீபத்தில் சீன நாடு 1.4 பில்லியன் டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுக திட்டத்திற்கான மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் பலத்த எதிர்ப்பிற்கு இடையே  நிறைவேற்றியிருக்கிறது. அந்த திட்டத்திற்கான அறிவிப்பு பலகையில் கூட சிங்களம், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழி இடம்பெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது சீனாவின் காலனி நாடாக இலங்கை மாறிவருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய போக்குகள் காரணமாக இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

உலக நாடுகள் மத்தியில் தமது பிம்பத்தை கட்டமைக்கிற பணியில் தீவிரம் காட்டுகிற பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் கட்டுப்பாட்டை நாளுக்கு நாள் இழந்து வருவது நமது வெளியுறவு கொள்கையின் மிகப்பெரிய தோல்வியாகவே கருதவேண்டியுள்ளது. பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு காரணாமாக இலங்கையில் வாழுகிற தமிழர்களின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் - முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? - மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் மத்திய அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
3. மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதா: 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
4. டெல்லியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் !
மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
5. ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.