திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து
x

திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வழியில் சின்னஞ் சிறு பிராயம் முதல் திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கி, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.

அவர்கள் மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவும், துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, சகோதரி கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story