பாகிஸ்தானில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது; 150 பேர் கருகி பலி


பாகிஸ்தானில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது; 150 பேர் கருகி பலி
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 25 Jun 2017 7:43 PM GMT)

பாகிஸ்தானில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது. இதில் 150 பேர் கருகி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி, அகமத்பூர் ஷார்கியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்தது. இதன் காரணமாக அதில் இருந்த பெட்ரோல் கொட்டி சாலையில் ஆறாக ஓட தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் சாலையில் ஓடிய பெட்ரோலை அள்ளிச்செல்ல முயற்சித்தனர். அந்த நேரத்தில் ஒருவர் சிகரெட் பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது தீப்பற்றிக்கொண்டது. டேங்கர் லாரியும் வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.  பெட்ரோல் சேகரிக்க வந்த அனைவரும் எதிர்பாராத வகையில் தீயில் சிக்கிக்கொண்டனர்.

எந்தவித மருத்துவ சிகிச்சையும் பெற முடியாத நிலையில், 123 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில், ஹெலிகாப்டர்களில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அவர்களில் 27 பேர் செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் உயிரிழந்து விட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து விட்டது.

பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முல்தானுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக அவர் தனது ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித்தலைவர் இம்ரான் கான் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.


Next Story