புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்


புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2019 11:15 PM GMT (Updated: 17 March 2019 7:59 PM GMT)

புல்வாமா தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாஷிங்டன்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

அத்துடன் ஜெய்ஷ் இ முகமது உள்பட தங்கள் மண்ணில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

இதற்கிடையில், அயல்நாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் புல்வாமா தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சமூகத்தின் சர்வதேச நண்பர்கள் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை மற்றும் உலகளாவிய காஷ்மீர் பண்டிட் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.

ஹூஸ்டன் நகர் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியினர் “உலக பயங்கரவாத நாடு பாகிஸ்தான், பயங்கரவாதத்தை நாட்டின் கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

“புல்வாமா தாக்குதல் இந்திய இறையாண்மை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் கூறினர். மேலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்துக்கு முன்னர், மேற்கூறிய 2 சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினர். அவர்கள் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 30 ஆண்டு காலமாக தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் உருவாக்கப்படும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் இறக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

பயங்கரவாத நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வணிகமாக்கி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதற்கும் பாகிஸ்தானை பொறுப்பு ஏற்க செய்ய உலகளாவிய சமூகம் அழுத்தம் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story