ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் சாவு


ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் சாவு
x
தினத்தந்தி 9 March 2020 7:49 PM GMT (Updated: 9 March 2020 7:49 PM GMT)

ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.

டெஹ்ரான்,

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இந்த வைரசால் 237 பேர் பலியாகி இருக்கின்றனர். 7,161 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு தாக்குதலின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், சாராயம் குடித்தால் இந்த வைரசில் இருந்து தப்பிக்கலாம் என அங்கு வதந்திகள் பரவி வருகின்றன. இதை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு குஜெஸ்தான் மாகாணம் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் விஷ சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 220 பேர் பல்வேறு உபாதைகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘மெத்தனால்’ என்ற வேதிப்பொருள் கலந்த சாராயம் குடித்ததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

ஈரானில் சாராயத்துக்கு அரசுக்கு தடை விதித்துள்ள நிலையில், கொரோனா வைரசை தடுக்கும் என நம்பி விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story