ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா - தென் கொரியா கண்டனம்


ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா - தென் கொரியா கண்டனம்
x
தினத்தந்தி 21 March 2020 11:15 PM GMT (Updated: 21 March 2020 10:06 PM GMT)

வட கொரியா ஒரே நாளில் 2 ஏவுகணைகளை அதிரடியாக ஏவி பரிசோதித்து உள்ளது. இதற்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சியோல்,

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா.சபை தீர்மானத்தை மீறியும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. இதனால் அந்த நாடு மீது ஐ.நா. சபையும், அமெரிக்காவும் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வந்தன.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் அவர்கள் இரண்டாவது முறையாக சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நின்றுபோனது.

மேலும், 17 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த ஏவுகணை சோதனைகளை வட கொரியா மீண்டும் தொடங்கியது. கடந்த ஆண்டில் இருந்து 13 முறை ஏவுகணை சோதனைகளையும், ராக்கெட் என்ஜின் சோதனைகளையும் வடகொரியா நடத்தியது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே கதிகலங்க வைத்து வருகிற நிலையில், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை வடகொரியா அதிரடியாக ஏவி பரிசோதித்து அதிர வைத்துள்ளது.

இது குறித்த பரபரப்பு தகவல்களை தென் கொரியா வெளியிட்டுள்ளது.

வடகொரியா, தன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சன்சோன் என்ற இடத்தில் இருந்து நேற்று காலை 6.45 மணிக்கும், 6.50 மணிக்கும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.

இந்த ஏவுகணைகள் 410 கி.மீ. தொலைவுக்கு பறந்தன. அவை கிழக்கு கடலோரப்பகுதியில் போய் விழுந்தன.

அதே நேரத்தில் ஜப்பான் நாட்டுக்குள் அந்த ஏவுகணைகள் வரவில்லை என்று அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் கூறியது.

இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்தது. இதை உடனே வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கண்டித்தது. உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்போது, வடகொரியா இப்படி ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது பொருத்தமற்றது என்றும் தென் கொரியா கூறியது.

வடகொரியாவின் இந்த அதிரடி செயல்பாடு குறித்து தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே வடகொரியாவின் நாடாளுமன்றம் அடுத்த மாதம் 10-ந் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றம், ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று வர்ணிக்கப்படக்கூடிய வகையில் அதிகாரமற்று திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நாடாளுமன்ற கூட்டத்தில் எது பற்றி விவாதிக்கப்படும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story