பாகிஸ்தான்: 7 நகரங்களில் அதிரடி சோதனை; 9 பயங்கரவாதிகள் கைது


பாகிஸ்தான்:  7 நகரங்களில் அதிரடி சோதனை; 9 பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 11 Dec 2023 4:01 PM GMT (Updated: 11 Dec 2023 4:05 PM GMT)

இந்த சோதனையில், வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், மொபைல் போன்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பஞ்சாப்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றி பயங்கரவாத ஒழிப்பு துறைக்கு உளவு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, லாகூர், பைசலாபாத், குஜ்ரன்வாலா, பகவல்பூர், பகவல்நகர், சியால்கோட் மற்றும் ஹபீசாபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதுபோன்று, துறை சார்பில் பல்வேறு இடங்களில் 70 முறை நடந்த சோதனையில் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற பயங்கரவாத அமைப்பிற்கு பெரிய அளவில் நிதியுதவி அளித்தவர்கள் என தெரிய வந்தது.

இந்த சோதனையில், வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், மொபைல் போன்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதேபோன்று இந்த வாரத்தில் நடந்த 314 பயங்கரவாத ஒழிப்பு சோதனைகளில், 12,893 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய 47 பேர் கைது செய்யப்பட்டனர் என அந்த துறை தெரிவிக்கின்றது.


Next Story