உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...


உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...
x
தினத்தந்தி 21 Dec 2018 8:35 AM GMT (Updated: 21 Dec 2018 8:35 AM GMT)

நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.

இதையே திருக்குர்ஆன் (28:77) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’.

வாழ்க்கையில் நாம் செய்யும் எந்த ஒரு சிறிய உபகாரத்தையும், சாதாரணமாக எடை போடாமல் பெரும் நன்மை தரும் காரியமாக புரிந்து கொண்டு, முடிந்தளவு உபகாரம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரமாவது செய்யாமலிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

‘உபகாரம் என்றால் என்ன?’

உபகாரம் என்பது நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மையைச் செய்தல். நன்மையான காரியங்கள் அனைத்தும் உபகாரமே.

உபகாரம் இரு வகைப்படும். அதில் ஒன்று, ‘நமக்கு நாமே செய்யும் உபகாரம்’. நம் சொல், செயல் மற்றும் வணக்க வழிபாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள் இவைகளை நல்லவிதமாக செயல்படுத்துதல். மேலும் நம் உயிர்க்கும், உடலுக்கும் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் மிகச்சரியாகச் செய்தல்.

அடுத்தது, ‘நாம் பிறருக்குச் செய்யும் உபகாரம்’. நாம் பிறர் நலன்களை பேணி, பிறரிடம் நல்லவிதமாக நடந்து கொள்வதும், அவர்களுக்கு செய்யவேண்டிய நன்மையான அனைத்து காரியங்களை செய்வதும் ஆகும்.

உபகாரங்கள் எவை?

உபகாரம் என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கியது. பொருளால் மட்டும்தான் உபகாரம் செய்ய முடியும் என்பதில்லை. பாதை தெரியாதவருக்கு சரியான பாதையைக் காட்டுவது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது, நன்மையை ஏவி தீமையை தடுப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பிறரின் இன்ப துன்பங்களிலும், லாப நஷ்டங்களிலும் பங்கு கொள்வது.

பசித்தவனின் பசியை போக்குவது, தாகித்தவனின் தாகத்தை தீர்ப்பது, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவிப்பது, கடனாளியின் கடனை தள்ளுபடி செய்வது, அல்லது கடனின் தவணையை நீட்டுவது, பெற்றோருக்கும், ஊனமுற்றோருக்கும் உதவி செய்வது, வயதானவர்களுக்கு ஒத்தாசை செய்வது, சிறியவர்களிடம் இரக்கம் காட்டுவது, எதிரியை மன்னிப்பது, இன்னும் இதுபோன்ற நன்மையான காரியங்கள் அனைத்தும் விலை மதிக்க முடியாத உபகாரங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:-

‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவைகளை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்கள் வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: திர்மிதி)

பெற்றோருக்கு செய்யும் உபகாரம்

‘பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்’ என்பது திருக்குர்ஆன் (2:83) கட்டளையாகும்.

‘மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பயணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்’ என்றும் திருக்குர்ஆன் (4:36) குறிப்பிடுகிறது.

ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, மனித நேயம். பிள்ளைகள் பெற்றோருக்கும், செல்வந்தர்கள் ஏழைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், கணவன்-மனைவிக்கும், மனைவி-கணவனுக்கும், உபகாரம் செய்து வாழவேண்டும்.

உபகாரம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு, இவைகள் யாவும் தடை கற்களாக இருக்கக்கூடாது. மனிதநேயம் அடிப்படையில் தெரிந்தவர், தெரியாதவர், அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர், நண்பன், எதிரி, அண்ணன், தம்பி இப்படி பாகுபாடில்லாமல் உபகாரம் செய்து வாழவேண்டும்.

அநியாயம் செய்தவனுக்கும் உபகாரம் செய்

‘உனக்கு அநியாயம் செய்தவனுக்கும் உதவி செய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து ஹூதைபா (ரலி) அறிவிப்பதாவது:-

“நீங்கள் மற்றவர்களின் நடைமுறையைப் பார்த்து அவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். ‘மக்கள் நமக்கு நல்லது செய்தால், நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். மக்கள் நமக்கு அநியாயம் செய்தால், நாமும் அவர்களுக்கு அநியாயம் செய்வோம்’ என்று சொல்லாதீர்கள். மக்கள் உங்களுக்கு நல்லது செய்தால், நீங்களும் நல்லது செய்வது, மக்கள் தவறான முறையில் நடந்து கொண்டாலும், நீங்கள் அநியாயம் செய்வதில்லை என்ற குணத்தின் மீது உங்களை நீங்களே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: திர்மிதி)

உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்ட போதும், நபிகளாரை இறை மறுப்பாளர்கள் காயப்படுத்திய போதும், அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி தோழர்களில் ஒருவர் நபிகளாரிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது நபிகளார் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: ‘இறைவா, என் சமுதாயத்தை மன்னித்து விடு. அவர்கள் அறியாத மக்கள்’.

அநியாயக்காரர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உபகாரம் செய்தது வரலாற்றில் தங்க எழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உபகாரம் செய்தவனுக்கு பதில் உபகாரம் செய்

‘நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (திருக்குர்ஆன் : 55:60)

நமக்கு உபகாரம் செய்தவனுக்கு நாமும் பதில் உபகாரம் செய்வது மிக நன்று.

ஒரு நாள் உமர் பின் அப்துல் அஜீஸ் தன் பணிப்பெண்ணிடம் ‘விசிறி எடுத்து வீசு நான் தூங்கப் போகிறேன்’ என்றார். அவள் வீசியதும் உமர்பின் அப்துல் அஜீஸ் தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுக்கும் தூக்கம் வரவே அவளும் தூங்கிவிட்டாள்.

உமர் பின் அப்துல் அஜீஸ் விழித்த பொழுது தனது பணிப்பெண் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டார். வெப்பம் அதிகமாக இருந்ததால் அருகில் கிடந்த விசிறியை எடுத்து அந்தப்பெண்ணுக்கு வீசினார். தன் மீது திடீரென்று காற்று வீசுவதை உணர்ந்த பணிப்பெண் விழித்த பொழுது, எஜமானர் தனக்கு வீசிக் கொண்டிருந்ததை கண்டதும் பயத்தில் நடுங்கினாள்.

உடனே உமர்பின் அப்துல் அஜீஸ் ‘நீயும் என்னைப் போன்ற மனித இனம் தான். என்னை தாக்கியது போன்றே உன்னையும் வெப்பம் தாக்கியது. எனவே நீ எனக்கு வீசியது போன்றே நானும் உனக்கு வீச பிரியப்பட்டேன்’ என்றார்.

இங்கே பணிப்பெண்ணுக்கு உபகாரம் செய்வதற்கு எஜமான் என்ற பதவி தடையாக அமையவில்லை. எனவே முதலாளிக்கு தொழிலாளி உழைத்துக் கொடுத்து உபகாரம் செய்வது போல, முதலாளியும் தொழிலாளியின் நலன்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டு உபகாரம் புரிய வேண்டும். முதலாளி தொழிலாளி என்ற வித்தியாசம் பெயரளவில் தான் இருக்கவேண்டுமே தவிர மனதளவில் இருக்கக்கூடாது.

‘உபகாரம் செய்ததை சொல்லிக்காட்டாதே’

‘நம்பிக்கையாளர்களே, இறைவனின் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும், உங்கள் தர்மங்களை பாழாக்கிவிடாதீர்கள்’ (திருக்குர்ஆன் 2:264)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:

‘மூன்று மனிதர்களிடம் இறைவன் பேசவும் மாட்டான், இன்னும் இறுதிநாளில் அவன் அவர்களை கருணையுடன் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு (திருக்குர்ஆன் 3:77) என்ற வசனத்தை நபி (ஸல்) மூன்று முறை ஓதினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே, நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?’ என அபூதர் (ரலி) கேட்டார்கள். ‘தமது கீழ் ஆடையைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்து விட்டுச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்:முஸ்லிம்)

அன்பர்களே, நண்பர்களே, உபகாரம் செய்து, அதை சொல்லிக்காட்டி, செய்த உபகாரத்தை பாழ்படுத்துவதை விட்டுவிட்டு, உபகாரமே செய்யாமல் இருங்கள். அல்லது உபகாரம் செய்துவிட்டு சொல்லிக்காட்டாமல் யாரையும் புண்படுத்தாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

Next Story