ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார்


ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார்
x
தினத்தந்தி 30 Aug 2019 12:08 PM GMT (Updated: 30 Aug 2019 12:08 PM GMT)

ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய சரீரத்தில் எப்போதும் ஆரோக்கியமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

ஒரு சிறிய வேதனை நம்முடைய சரீரத்தில் ஏற்பட்டாலும் நம்முடைய முழு உடலும் அதனால் பாதிக்கப்பட்டு, ஆத்மாவிலே சமாதானத்தை இழந்து சோர்வடைந்து விடுகிறோம்.

இந்த நாட்களில் சத்துரு தன்னுடைய வஞ்சகத்தினால் அநேக குடும்பங்களில் வியாதிகளைக் கொண்டு வந்து அவர்களுடைய பொருளாதாரம் முழு வதையும் வீணாக விரயம் செய்து, மருத்துவர்களுக்கு செலவழித்து, குடும்பங்களில் சமாதானத்தை இழக்கப் பண்ணுகிறான்.

நாம் ஆராதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவர்.

‘அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்’. (சங்.33:9)

‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்’. (யாத்.15:26)

‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. (சங்.107:20)

மேற்கண்ட வாக்குத்தத்தங்களைப் போல இன்னும் ஏராளமான தெய்வீக சுகத்தைக் குறித்த வாக்குத்தத்தங்களை ஆண்டவர் நமக்கு கிருபையாகவும், இலவசமாகவும் தந்துள்ளார்.

தளர்ந்து போன உங்கள் நம்பிக்கையை மறுபடியும் தட்டி எழுப்பி, உங்களை பெலவீனப்படுத்துகிற சாத்தானை இயேசுவின் நாமத்திலே கடிந்து கொண்டு அற்புத சுகத்தை சுதந் தரித்துக் கொள்ளுங்கள்.

இயேசு அவளைக்கண்டார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப் படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக்கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ‘ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்’ என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்’. (லூக்கா 13:1113)

நம்முடைய இரட்சகருக்கு வேதத்திலே எத்தனையோ பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே ஒன்று ‘அவர் நம்மை காண்கிறவர்’.

வனாந்தரத்திலே அலைந்து திரிந்த ஆகார் நம் ஆண்டவரைப் பார்த்து ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ என்று கூறினாள்.

ஆள் நடமாட்டமும், மிருக ஜீவன் களும் இல்லாத ஒரு வெறுமையான இடம் தான் வனாந்தரம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையும் ஒரு வனாந்தரத்தைப் போல உங்கள் கண்களுக்கு காட்சி அளிக்கலாம். உங்கள் சரீரத்தில் ஏற்பட்டுள்ள வியாதியின் நிமித்தம் எல்லோராலும் நீங்கள் கைவிடப்பட்டவர் களாய் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஆகாரைக் கண்ட ஆண்டவர், இக்கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டும் காணாதவர் போல இருப்பாரோ? நிச்சயமாகவே அவர் உங்களைக் காண்கிறார். ஆகவே கவலைப்படாதிருங்கள். உங்கள் நம்பிக்கை நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கட்டும்.

இயேசு தம்மிடத்தில் அழைத்தார்

வியாதி அநேக காரணங்களினால் நம்முடைய சரீரத்தை ஆட்கொள்ளு கிறது. அதில் ஒன்று அசுத்த ஆவியினால் நம் சரீரம் பாதிக்கப்படும்போது, அந்த அசுத்த ஆவியே நமக்குள் வியாதியைக் கொண்டு வருகிறது.

ஒருமுறை இயேசு எரிகோ பட்டணத்தின் வீதியில் நடந்து போன போது திரளான ஜனங்களுக்கு மத்தியிலே வழி யருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடனாகிய பர்திமேயுவின் சத்தத்தை தம் காதுகளில் கேட்டு அழைத்து வரும்படி சொன்னவர், உங்களுக்கு அற்புதம் செய்யாமல் இருப்பாரா?.

நம் ஆண்டவர் அற்புதங்களின் தேவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வியாதியின் கொடூரத்தின் நிமித்தம், வேதனையின் நிமித்தம் உங்கள் விசுவாசத்தை நீங்கள் தளரவிட்டிருக்கலாம். உங்கள் நாவில் எப்போதும் அவிசுவாசமான வார்த்தைகளையே இன்று வரை நீங்கள் உச்சரித்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட அவிசுவாச வார்த்தைகளுக்கு இன்றே நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களுக்கு அற்புதம் செய்வதற்கு என்று ஆண்டவர் ஒரு வேளை வைத் திருப்பார். அந்த நேரம் வரும்போது நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார்.

தேவனிடத்திலிருந்து வரக்கூடிய தெய்வீக சுகம் என்பது அது மனிதனுடைய அறிவுக்கு எட்டாத ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியாகும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கின சம்பவங்களைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் நாம் தெளிவாகக் காணலாம்.

இயேசு சில வியாதிகளை தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கி இருக்கிறார். சில நோயாளிகளை இயேசு குணமாக்கும் போது தம்முடைய அற்புதம் செய்யும் கரத்தை அவர்கள் மேல் வைத்து சுகமாக்கி இருக்கிறார்.

அதைப் போல இன்றைக்கும் ஆவியாயிருக்கிற அவர் தம்முடைய கரத்தினால் உங்களை தொடுவது அதிக நிச்சயம்.

ஏசாயா சொல்லுகிறார் ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசா.53:5)

அவருடைய தழும்புகளுள்ள வல்லமையின் கரம் உங்கள் வியாதியை தொட்டு உங்களை சுகமாக்கும். ஜெபிப்போமா?

ஜெபம்: பரிசுத்தமுள்ள நல்ல ஆண்டவரே! இயேசுவின் நாமத்தினால் வியாதியாய் இருக்கிற உம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன். சிலுவையில் நீர் சிந்தின உம்முடைய ரத்தத்தின் வல்லமையினாலே பிசாசின் கிரியைகளை இப்பொழுதே நீர் அழித்து உம்முடைய பிள்ளைகளை நீர் குணமாக்கும். உம்முடைய தழும்புள்ள கரம் ஒவ்வொரு வியாதியுள்ள சரீரங்களையும் இப்பொழுதே தொடட்டும். எங்கள் ஜெபத்திற்கு நீர் இப்பொழுதே பதில் கொடுக்கிறதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.

- சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

Next Story