இயேசு கிறிஸ்து: கடவுள் உங்கள் காயங்களை ஆற்றுவார்


இயேசு கிறிஸ்து: கடவுள் உங்கள் காயங்களை ஆற்றுவார்
x

கடவுள் நம் வலிகளை உணர்கிறார். நம் வலிகளை தன் வலிகளாக ஏற்றுக்கொள்கிறார். உங்கள் கூக்குரலுக்கு தாமதிக்காமல் உடனே பதில் தருவார்.

நாளுக்கு நாள் புதிது புதிதாக உருவாகிப் பரவி வருகின்ற நோய்களின் எண்ணிக்கையும் மலிந்துவிட்டது. நம் வாழ்க்கை முறையும், உணவுப்பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இதன் விளைவாக நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வு என்பது கேள்விக்குறியாகி விட்டது.

இந்த சூழ்நிலையில் கடவுள் நமக்கு 'நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்' (எரேமியா30:17) என்று வாக்குத்தத்தம் தருகிறார்.

குணமாக்கும் கடவுள்

கிரேக்கர்கள் அஸ்லிபின்ஸ் என்னும் பாம்பு வடிவிலான கிரேக்க கடவுளை 'குணமாக்கும் கடவுள்' என்று வணங்கி வந்தனர். இது அப்பல்லோ என்னும் கிரேக்க கடவுளின் மகன். இத்தெய்வத்தை நோயைப் போக்கும் தெய்வமாக கருதினர்.

எனவே, அந்தக்காலத்தில் நோய் உள்ளவர்களை இத்தெய்வ உருவம் இருக்கும் ஆலயத்தில் படுக்க வைத்தனர். இரவு நேரத்தில் அந்த தெய்வம் பாம்பு வடிவில் வந்து நோயாளியின் உடலில் நோய் பாதித்த பகுதியை தனது நாக்கால் நக்கி குணப்படுத்தும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது.

"நம் கடவுள் தம் திருக்கரங்களால் தொட்டு நம்மைக் குணமாக்குகிறார். அவருடையத் தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா53:5)

உங்கள் நிலைமைகளை அறிவார்

கடவுள் நம் சூழ்நிலைகளையும், நம் எல்லாவிதமான தேவைகளையும் நன்றாக அறிந்திருக்கிறார். எரேமியா நூலில் இஸ்ரவேலர்களின் நிலையை கடவுள் விளக்குகிறார்.

'உன் புண் ஆறாததாயும், உன் காயம் கொடிதாயும் இருக்கிறது. உன் காயங்களை கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை, உன்னை சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களுமில்லை, உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள். அவர்கள் உன்னை தேடார்கள்' (எரேமியா30:12,13,14) என்கிறார்.

ஆம், நம் உடல் நிலை, மனநிலை, பொருளாதார நிலை, சமூக நிலை ஆகியவற்றை கடவுள் அறிந்திருக்கிறார்.

உங்கள் வலிகளை உணர்கிறார்

கடவுள் நம் வலிகளை உணர்கிறார். நம் வலிகளை தன் வலிகளாக ஏற்றுக்கொள்கிறார். பிறரின் வார்த்தைளாலும், செயல்களாலும் நொறுங்கி இருக்கும் உங்கள் வலிகளை கடவுள் முழுமையாக அறிவார். வேதனையின் மிகுதியால் கதறிக் கொண்டிருக்கிற உங்கள் கூக்குரலுக்கு தாமதிக்காமல் உடனே பதில் தருவார்.

விசாரிப்பாரற்ற உங்கள் நிலையை நிச்சயமாக மாற்றுவார். ஏனெனில் அவர் 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னை குணமாக்குவேன்' (2 இராஜா 20:5) என்று வாக்கு தந்திருக்கிறார்.

உங்கள் நோயும், காயங்களும் அதனால் ஏற்படும் வலிகளும் மிகுதியாக இருக்கலாம். எப்படிப்பட்ட பெரிய வியாதியாய் இருந்தாலும், எவ்வளவு கொடூரமான, துக்ககரமான, வருந்தத்தக்க நிலையில் இருந்தாலும் கடவுள் உங்கள் காயங்களை ஆற்றி, உங்களுக்கு ஆரோக்கியம் வரப்பண்ணுவார். அவர் ஒருவராலே நம் காயங்களை ஆற்றமுடியும். கடவுள் நம் ஆண்டவர் இயேசுவின் மூலமாக நம் பாடுகளை சுமந்தார்.


Next Story