இரக்கத்தை சிநேகிப்போம்!


இரக்கத்தை சிநேகிப்போம்!
x

கிறிஸ்துவில் முழு ஆன்மாவோடு அன்புகூர்ந்து, பிறனிடத்திலும் அன்பு கூறுகிறவர்கள் ஒருமனப்பட்டு கூடி ஜெபிக்கும்போது ஆண்டவர் அவர்களோடு கூட உறவாடுகிற இடம் தான் சபை அல்லது திருச்சபை என்று பொருள்படும்.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று மிகவும் சிறிய வயதில், எழுத படிக்க தெரிந்துகொள்வதற்கு முன்னரே நமக்கெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு வரி. அதை உள்வாங்கி நாம் எத்தனை பேர் கடைபிடிக்கிறோம்?.

கி.மு.1010-970 ல் சங்கீதக்காரனாகிய தாவீது, 'கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம், வாருங்கள்' என்று சொன்னபோது தனக்கு மகிழ்ச்சி என்று சொல்கிறார். (சங்கீதம் 122:1).

ஆலயம் என்பது ஆண்டவரை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வழிபடும் இடமாகும். கிறிஸ்துவில் முழு ஆன்மாவோடு அன்புகூர்ந்து, பிறனிடத்திலும் அன்பு கூறுகிறவர்கள் ஒருமனப்பட்டு கூடி ஜெபிக்கும்போது ஆண்டவர் அவர்களோடு கூட உறவாடுகிற இடம் தான் சபை அல்லது திருச்சபை என்று பொருள்படும்.

இயேசுவானவர் பரமேறின பின்னர், முதலாம் நூற்றாண்டில் இந்த திருச்சபை உருவாக ஆரம்பித்தது (அப்போஸ்தலர்2:41-47). கிறிஸ்துவுக்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஏனோக்கு, நோவா போன்றவர்கள் தேவனோடு சஞ்சரித்தார்கள் (ஆதியாகமம் 5:22). அவர்கள் எல்லாம் 900 வயதுக்கு மேலாக வாழ்ந்தார்கள்.

ஜலப்பிரளயம் ஏற்பட்டு, சீர்கெட்ட, கொடுமை நிறைந்த பூமி அழிந்து போனது (பேதுரு 2:5). நீதிமானாக காணப்பட்ட நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. எனவே, தேவன் தனக்கு கட்டளை இட்டபடி 133 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம், 13 மீட்டர் உயரமான, கிட்டத்தட்ட நான்கு மாடி கட்டிட உயரம் கொண்ட ஒரு பேழையை நோவா தயாரித்தார். அதில் அவரும், அவரது குடும்பத்தாரும், அவரை பின்தொடர்பவர்களும், சகலவித ஜீவன்களும் (மனிதர் தவிர்த்து) மீட்கப்பட்டார்கள்.

ஜலப்பிரளயத்துக்குப் பிறகு பூமியிலே மனுஷர் வாழப்போகிறது 120 வருஷம் (ஆதியாகமம் 6:3) என கர்த்தர் குறைத்தார். நோவாவும் அவன் குடும்பத்தாரும் பேழையை விட்டு புறப்பட்டு வந்து கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள். கர்த்தர் அதனை ஏற்றுக்கொண்டு, அவர்களோடு ஒரு உடன்படிக்கையும் செய்து, அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் 8:15-22).

நோவாவின் இரண்டாவது மகன் சேம் வம்சத்தில் பிறந்த, கல்தேயர் நாட்டிலே வாழ்ந்த, ஆபிரகாமை கர்த்தர் தெரிந்துகொண்டு கானான் தேசத்தில், (இப்போது உள்ள இஸ்ரவேல் நாடு) குடியேறச் செய்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு கர்த்தரோடு மிகவும் நெருங்கி ஜீவித்ததால் இஸ்ரவேலின் மூன்று முற்பிதாக்கள் என்று பெயர் பெற்றார்கள். எகிப்து நாட்டிலே 430 வருஷம் இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக கஷ்டப்பட்டதை கர்த்தர் கண்டு, மனம் இரங்கி, மோசேயின் தலைமையில் அவர்களை 40 வருஷம் யாத்திரையில் வழி நடத்தி, நியாயப்பிரமாணங்கள், கற்பனைகள் எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து இஸ்ரவேல் நாட்டுக்கு அழைத்து வந்தார்.

ஆசரிப்பு கூடாரத்திலும், சீனாய் மலை அடிவாரத்திலும் கர்த்தருடைய மகிமையை கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை ஆராதித்தார்கள் (யாத்திராகமம் 24:15-18).

முற்பிதாக்களின் வழி தோன்றல்களில், யூதா கோத்திரத்தில் பிறந்த தாவீது அரசன் கர்த்தருக்கு ஒரு ஆலயம் கட்ட எல்லா பொருட்களையும் அளித்தான். அவனது மகன் சாலொமோன் அரசன் எருசலேம் தேவாலயத்தை கட்டினான்.

கிறிஸ்துவானவர் பிறந்து (டிசம்பர் 25) எட்டாம் நாளிலே (ஜனவரி 2) விருத்தசேதனம் பண்ணப்பட்டு 'இயேசு' என்று பெயரிடப்பட்டார். (லேவியராகமம் 12:3, லூக்கா 2:21).

அதற்குப் பின்பு 33 நாட்கள் சுத்திகரிப்பின் நாட்கள் முடிவடைந்த பின்னர், முதல் பேரான எந்த ஆண் பிள்ளையும் கர்த்தருக்கு பரிசுத்தமானதால் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க, எருசலேம் தேவாலயத்திற்கு யோசேப்பும் மரியாளும் இயேசுவை கொண்டு போனார்கள் (லேவியராகமம் 12:4; லூக்கா 2:22-40).

இந்த நிகழ்வினை நாம் கிறிஸ்து திரு முன்னிலைப்படுத்தப்பட்ட திருநாள் என்று அனுசரிக்கிறோம். ஆலயத்திலே நீதியும் தேவபக்தியும் உள்ள சிமியோனும், தேவாலயத்தை விட்டு நீங்காமல் அனுதினமும் உபவாசித்து ஜெபம் பண்ணின அன்னாளும் இயேசுவைப் புகழ்ந்து, மீட்புக்காக காத்திருந்த யாவருக்கும் ஒரு ரட்சணியம் கிடைத்தது என்று மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினார்கள்.

இயேசுவானவர் இந்த உலகத்தில் ஊழியம் செய்த மூன்றரை ஆண்டு காலங்களிலே தேவாலயம் சென்றார். கண்டித்து உணர்த்தினார். வேதபாடங்களை வாசித்து விளக்கினார். வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. (எபிரெயர் 13:8)

எனவே, அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல், 'கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்' (எபிரேயர் 13) என்று மனதில் தைரியம் கொண்டவர்களாய், ஒருமனப்பட்டு, ஐக்கியத்துடன் செயல்படுங்கள். அன்னியரை உபசரிக்க மறவாமல், ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நியாயம் செய்து, இரக்கத்தை சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடந்து, கர்த்தரிடம் அடிபணிந்து நமக்கும் நம் நாட்டிற்கும் ஆசீர்வாதமான மக்களாக மாறுவோம் (மீகா 6:8). இரக்கத்தை சிநேகிப்போம்!


Next Story