இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று பேசினோம் - ரோகித் சர்மா


இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று பேசினோம் - ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பாதி இன்னிங்ஸில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய நாங்கள் கொஞ்சம் குறைந்த ரன்கள் எடுத்தோம்.

இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று பேசினோம். கடந்த போட்டியை விட உண்மையாகவே இது நல்ல பிட்ச்சாக இருந்தது. எங்களிடம் நல்ல பவுலிங் வரிசை இருந்ததால் வெற்றிக்கான தன்னம்பிக்கையும் இருந்தது. போட்டியின் பாதியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது எங்கள் வீரர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து இது நமக்கு நடந்தால் அது அவர்களுக்கும் நடக்கும் என்று சொன்னேன்.

அனைவரும் வெளிப்படுத்தும் சிறிய பங்கு கூட வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பும்ரா தன்னுடைய பலத்தை வைத்து செல்கிறார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அறிவோம். அவரைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த உலகக்கோப்பை முழுவதும் அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.

அவர் ஜீனியஸ் என்பதை நாம் அறிவோம். ரசிகர்கள் கூட்டம் சூப்பர். நாங்கள் விளையாடும் போதெல்லாம் அவர்கள் எங்களை ஏமாற்றுவதில்லை. அவர்கள் வீட்டுக்கு பெரிய புன்னகையுடன் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன். இது ஆரம்பம் மட்டுமே இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story