அமைச்சர்களை வசைபாடி சுவரொட்டி: போஸ்டர் ஒட்டி பணம்– நேரத்தை வீணாக்காதீர்கள்

அமைச்சர்களை வசைபாடி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டிய நிலையில், ‘போஸ்டர் ஒட்டி பணத்தை வீணாக்காதீர்கள்’ என்று ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-07-23 21:45 GMT

சென்னை,

‘‘தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’’ என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னாலும் சொன்னார், அவர் மீது அமைச்சர்கள் எதிர்ப்பு கனைகளை தொடர்ந்து எய்து வருகின்றனர். ‘‘ஆதாரம் இல்லாமல் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசனும் இந்த பிரச்சினையை லேசாக விடாமல், ‘‘அமைச்சர்கள் கேட்ட ஊழல் ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் இ–மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்’’ என்று ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். ரசிகர்களும் அதற்கு தயாரானபோது, தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் இ–மெயில் முகவரி மாயமாகி இருந்தது. இதனால், கமல் ரசிகர்களால் ஊழல் ஆதாரங்களை அனுப்பிவைக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, ‘‘அமைச்சர்களின் இ–மெயில் முகவரிக்கு பதிலாக ஊழல் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள்’’ என்று கூறினார். அது தொடர்பான இ–மெயில் முகவரியையும் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்துக்கும் அனுப்பிவைத்தார்.

அதன்படி, கமல் ரசிகர்கள் தங்களிடம் உள்ள ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் பெற்று லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமல் ரசிகர்கள் அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் தாண்டி, நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த கமல் ரசிகர்கள், பரபரப்பு சுவரொட்டியை நகர் முழுவதும் ஒட்டினார்கள். அதில், ‘‘எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் அரசியல்வாதிகளே. நீங்கள் கட்ட வேண்டியது எட்டு முழம் சேலை’’ என்று அமைச்சர்களை வசைபாடி கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் இதுபோன்று ‘விஸ்வரூபம்’ எடுத்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிவிப்பில், ‘‘தரந்தாழாதீர். ரசிகர்களின் நற்பணி எனக்கு அதிகமாக தேவை. மற்றவைகளுக்கு பதில் அளிக்க நானே போதுமானவன். எனவே சுவரொட்டிகள் ஒட்டி பணத்தையும், நேரத்தையும் வீணாக்க வேண்டாமே. இந்த விவாதத்தை இன்னும் அதிகப்படுத்துங்கள், உங்களால் முடிந்தால்’’ என்று அவர் கூறியிருந்தார்.

ரசிகர்களை உத்வேகப்படுத்தும் வகையில் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதால், தமிழக அரசுடனான நடிகர் கமல்ஹாசனின் மோதல் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்றே தெரிகிறது.

மேலும் செய்திகள்