டிஜிட்டல் வரவால் சினிமா தரம் குறைந்துள்ளது - அமிதாப்பச்சன்

டிஜிட்டல் வரவால் சினிமா தரம் குறைந்துள்ளது என அமிதாப்பச்சன் கூறினார்.

Update: 2018-04-04 23:30 GMT

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால சினிமா பற்றி பேசினார். அவர் கூறியதாவது:-

“என்றைக்கும் அசல் அசல்தான். போலி போலிதான். சினிமா உலகம் அசலில் இருந்து போலிக்கு திரும்பி இருக்கிறது. அசல் என்பது பிலிம். போலி என்பது டிஜிட்டல். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை. பிலிமில் நடித்ததால்தான் எங்களை ‘பிலிம் ஸ்டார்’ என்று அழைத்தார்கள்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களுக்கு பிலிம் சுருளைத்தான் பயன்படுத்துகிறார். பிலிம் படங்களில்தான் ஒரிஜினல் தன்மை இருக்கும். பழங்காலத்து ஓவியங்களை ஜெராக்ஸ் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் டிஜிட்டல் படங்கள் இருக்கின்றன. டிஜிட்டல் வந்த பிறகு தியேட்டர்களில் இருந்த பழைய புரொஜக்டர்களை மாற்றி விட்டார்கள். கேமராக்களும் மாறி விட்டன.

எங்கள் காலத்தில் கேமராக்கள் பெரிய அளவில் இருக்கும். அதன் முன்னால் நின்று நடிப்பதற்கு பயம் இருக்கும். தொழில் மீதும் அப்போதைய நடிகர்-நடிகைகளுக்கு பக்தி இருந்தது. கட்டுப்பாடு இருந்தது. பிலிம் குறைவாகத்தான் இருக்கும். அதை சிக்கனமாக பயன்படுத்தினோம். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரே டேக்கில் நடித்து முடிக்க வேண்டும் என்பார்கள்.

என்னிடம் டைரக்டர் ஒருவர் 60 அடி நீளம் தான் பிலிம் உள்ளது ஒரே டேக்கில் நடித்தால் தான் முடிக்க முடியும் என்று நெருக்கடி கொடுத்தார். டிஜிட்டல் வந்த பிறகு 25 டேக் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று ஆகிவிட்டது.” என அமிதாப்பச்சன் கூறினார்.

மேலும் செய்திகள்