பிரபல வில்லன் நடிகர் கொல்லம் அஜித் மரணம்

பிரபல வில்லன் நடிகர் கொல்லம் அஜித் மரணமடைந்தார்.

Update: 2018-04-05 22:45 GMT

பிரபல மலையாள வில்லன் நடிகர் கொல்லம் அஜித் கேரளாவில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. கொல்லம் அஜித்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

கொல்லம் அஜித் 1983-ல் ‘பரன்னு பரன்னு பரன்னு’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். யவஜனோத்சவம், நாடோடி கட்டு, நம்பர் 20 மெட்ராஸ் மெயில், நிர்ணியம், ஆரம் தம்புரான், வெள்ளியெட்டான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 1989-ல் அக்னி பிரவேசம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். 1990-களில் அதிக படங்களில் வில்லனாகவே வந்தார். தமிழ் படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்து இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மூன்று மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கொல்லம் அஜித் கடைசியாக நடித்த அர்த்தனாரி படம் 2013-ல் வெளியானது. மரணம் அடைந்த கொல்லம் அஜித்துக்கு பிரமிளா என்ற மனைவியும் ஸ்ரீஹரி என்ற மகனும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர். அஜித் மறைவுக்கு மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்