சினிமா செய்திகள்
‘படுக்கைக்கு அழைத்தாலும் பட உலகம் வேலை தருகிறது’பெண் நடன இயக்குனர் கருத்தால் சர்ச்சை

படுக்கைக்கு அழைத்தாலும் பட உலகம் வேலை தருகிறது என்ற பெண் நடன இயக்குனர் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மும்பை, 

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை தெலுங்கு பட உலகினர் படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். இதையொட்டி ஐதராபாத்தில் அவர் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக இந்தி பட உலகின் பெண் நடன இயக்குனர் சரோஜ் கானிடம் மராட்டிய மாநிலம் சாங்கிலியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து, அது தொடர்பான வீடியோ டி.வி. சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ‘வைரல்’ ஆகி உள்ளது.

அதில் அவர், “இது (நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது) நினைவுக்கு எட்டாத காலம் தொடங்கி நடந்து வருகிறது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட இதை செய்கிறார்கள். எதற்காக பட உலகினரை துரத்துகிறீர்கள்? குறைந்தபட்சம் பட உலகினர் வேலை தருகின்றனர். பலாத்காரம் செய்தாலும் பெண்களை கைவிட்டு விடுவதில்லை” என்று கூறி உள்ளார்.

இந்த சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக சரோஜ்கானிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியபோது, “நான் வருத்தப்படுவதாக ஏற்கனவே கூறி விட்டேன். என்ன கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டார்.