சினிமா செய்திகள்
என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது: பாலகிருஷ்ணா-வித்யாபாலன் நடிக்கிறார்கள்

என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலகிருஷ்ணா-வித்யாபாலன் நடிக்கிறார்கள்.

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் படமாகி, சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களிலும் இந்த படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

2 மாநிலங்களின் ரசிகர்களும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு கொடுத்த வரவேற்பு, மேலும் சிலரின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் ஆர்வத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து இருக்கிறது. புகழ் பெற்ற நடிகராக இருந்து ஆந்திர மாநில முதல்-மந்திரியாக உயர்ந்தவர், என்.டி.ராமராவ். பல படங்களில் அவர் ராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்தார். அவரை ஆந்திர மக்கள் கடவுளின் அவதாரமாக பார்த்தார்கள்.

அவருடைய வாழ்க்கை வரலாறில் பல திருப்பங்கள் உண்டு. சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன. அரசியலிலும் அவர் பல சாதனைகளை புரிந்த முதல்-மந்திரியாக இருந்தார். அவருடைய திரையுலக வாரிசுகளாக மகன் பாலகிருஷ்ணா, பேரன் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க பட அதிபர் விஷ்ணு முன்வந்துள்ளார். இந்த படத்துக்கு முதலில் தேஜா டைரக்டு செய்வார் என்று கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் டைரக்டர் கிருஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், பாலகிருஷ்ணாவின் 100-வது படமான ‘கவுதமிபுத்ர சாதகர்னி’ படத்தை டைரக்டு செய்தவர். என்.டி.ராமராவாக அவருடைய மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவருடைய மனைவியாக நடிப்பதற்கு வித்யாபாலனை அணுகினார்கள். முதலில் வித்யாபாலன் மறுத்து விட்டார். இப்போது, என்.டி.ராமராவின் மனைவி வேடத்தில் நடிக்க வித்யாபாலன் சம்மதித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூன்) மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகளை, ஜூலை மாதத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.